கோவில் திருவிழா பேனரில் மியா கலிபா புகைப்படம் - அகற்றிய காவல்துறையினர்
கோவில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மியா கலிபாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பேசுபொருளாகியுள்ளது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மனுக்கும் ஊர் மக்கள் ஆடி மாதத்தின்போது பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை முன்னிட்டு திருவிழா பேனர்கள் ஊரை அலங்கரித்து வருகின்றன. அதில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் புகைப்படங்களையும், திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் பேனர்களில் வைத்து அழகு பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் ஒன்றில், பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக மியா கலிபா பால்குடம் தூக்குவது போல் சித்தரித்து அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனருக்கு ஒரு தரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றொரு தரப்பினரோ, கோவில் திருவிழா சார்ந்த பேனரில் ஆபாச நடிகையின் புகைப்படம் இடம்பெறுவதா? எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்த நிலையில், போலீசார் அங்கு நேரில் சென்று அந்த பேனரை அங்கிருந்து அகற்றினர்.