பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்


பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 14 Aug 2024 3:07 PM GMT (Updated: 14 Aug 2024 4:38 PM GMT)

துணிநூல் மற்றும் ஆடை துறையில் மகளிருக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய முத்தரப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு துணிநூல் மற்றும் ஆடை நிறுவனங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தமிழ்நாடு அரசின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர் துறை, ஆகிய துறைகள் ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவத்திற்கான அமைப்புடன் இணைந்து, துணிநூல் மற்றும் ஆடை துறையில் பாலின சமத்துவம், மகளிருக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும், நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக "முத்தரப்புக் கூட்டமைப்பு" உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (14.08.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த முத்தரப்புக் கூட்டமைப்பு, பெண்கள் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவம் அதிகரிக்க ஒரு வலுவான கட்டமைப்பை அமைத்திட உதவும். மேலும் இக்கூட்டமைப்பு பிற துறைகளுக்கு முன்மாதிரியாக அமையும். இத்திட்டம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

இந்த கூட்டமைப்பு, பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் துணி நூல் மற்றும் ஆடைத் துறையில் உள்ள தர அங்கீகாரம் கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், அரசு அமைப்புகள், சேவையகங்கள், தொழில் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒன்றிணைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு, உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அனைத்து பங்காளர்களுடன் இணைந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, மற்றும் தீர்வு), 2013 சட்டத்தை செயல்படுத்தும் பணியாளர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகள் மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை இத்திட்டம் உருவாக்கும்.

நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள உள்ளக புகார் குழுக்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மகளிருக்கான அதிகாரம் அளித்தல் மையங்கள் ஆகியவற்றின் திறன் மேம்பாட்டிற்கு உதவும். மேலும், பெண்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையை மேம்படுத்தி, பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்கி, அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளித்தலை துணி நூல் மற்றும் ஆடை துறையில் உறுதி செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையர் வே. அமுதவல்லி, ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பின் இந்திய நாட்டின் பிரதிநிதி சூசன் பெர்கசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story