மகா விஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை; ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்


மகா விஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை; ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்
x
தினத்தந்தி 11 Sep 2024 12:20 AM GMT (Updated: 11 Sep 2024 4:32 AM GMT)

மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் குறித்த விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த சூழலில், அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவொற்றியூர் காவல்நிலையத்தில் மேலும் ஒருவழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை நடத்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கண்ணப்பன் நேற்று சென்னை அசோக்நகர் பள்ளியில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் குறித்த விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அளிக்கும் இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மகா விஷ்ணு மீது மேலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story