ஆவணி மாத கடைசி முகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு


ஆவணி மாத கடைசி முகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Sep 2024 4:30 PM GMT (Updated: 13 Sep 2024 4:30 PM GMT)

ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த தினமான 16-ந்தேதி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

தற்போது ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 16.09.2024 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 16.09.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story