குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதல் - அமைச்சர் அறிவிப்பு


குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதல் - அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2024 4:16 PM GMT (Updated: 13 Jun 2024 4:18 PM GMT)

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

சென்னை,

குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. அதன்பின்னர் மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுவதாக முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இறந்த தமிழர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடல்களும் நாளை கொச்சி கொண்டு வரப்படுகின்றன. கொச்சியிலிருந்து அமரர் ஊர்தி மூலம் தமிழர்கள் உடல்கள் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட உள்ளன.


Next Story