குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகாரில் சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் எதிராக கூடுதல் குற்றபத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் கடந்த 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு
அப்போது வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், விசாரணையை ஆகஸ்ட் 2 தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்தார்.
அதன்படி, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகினர்.
இதனையடுத்து வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கபட்டுள்ளது. எனவே அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும் அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சம்மன்களை சிபிஐ காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகும் பட்சத்தில் அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.