கருணாநிதி நினைவு நாணயத்தை வாங்க கட்சி நிர்வாகிகள் ஆர்வம்.. ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை


கருணாநிதி நினைவு நாணயம்
x
தினத்தந்தி 21 Aug 2024 10:09 AM GMT (Updated: 21 Aug 2024 11:08 AM GMT)

வசதி படைத்த நிர்வாகிகள் விலையை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ந்தேதி வெளியிட்டார். இந்த நாணயம் தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கிறது. ஒரு நாணயம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். தோழமை கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நேற்று மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.

வசதி படைத்த நிர்வாகிகள் விலையை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் சாதாரண தொண்டனால் நாணயத்தை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே கருணாநிதி நினைவு நாணயத்தை 100 ரூபாய் கொடுத்து வாங்க வழிவகை செய்ய வேண்டும் என்று, தொண்டர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story