காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்..? - இணை ஆணையர் விளக்கம்


காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்..?  - இணை ஆணையர் விளக்கம்
x
தினத்தந்தி 18 Sep 2024 9:16 AM GMT (Updated: 18 Sep 2024 9:25 AM GMT)

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்து காவல்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (41). இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரவுடி பாலாஜி 12 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல ரவுடி சிடி மணி வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகி விட்டு காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில், காக்காதோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த காக்காதோப்பு பாலாஜி தலைமறைவானார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை இடைமறித்து போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக டிரைவர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் டிக்கியை திறந்துள்ளார். காரின் டிக்கியை போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தபோது கார் திடீரென புறப்பட்டு சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருப்பது பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என தெரியவந்தது. உடனடியாக அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர்.

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்கு கார் சென்றுள்ளது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த காக்காதோப்பு பாலாஜி காரை நிறுத்திவிட்டு புதரை நோக்கி ஓடினார். மேலும், போலீஸ் வாகனத்தை நோக்கி கள்ளத்துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார். இதனால், போலீஸ் வாகனத்தின் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காக்காதோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட பகுதியில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் ஆய்வு செய்தார். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் இணை ஆணையர் கேட்டறிந்தார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. கஞ்சாவுடன் தப்பி சென்றவரைதான் போலீசார் விரட்டிச் சென்று சுற்றிவளைத்தனர். பாலாஜி சுட முயன்றதால்தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது. பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. போலீசார் சோதிக்கும்போது அவனுக்கு உயிர் இருந்தது. மறை தாக்குதலுக்கு பிறகே, அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. காக்கா தோப்பு பாலாஜி மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வந்த காரில் இருந்து 10 கிலோ கஞ்சா, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று இணை ஆணையர் பிரவேஷ் குமார் கூறினார்.


Next Story