யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டு உள்ளதா..? - அமைச்சர் மதிவேந்தன் அளித்த பதில்
யானைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்த விவாதத்திற்கு அந்தத் துறையின் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்து பேசியதாவது:-
யானை வழித்தடங்கள் என்றால், யானை வாழ்விடங்களை இணைப்பதற்காக யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் தடங்கள் என்று குறிப்பிடலாம்.வனப்பகுதிகள் இடைவெளியின்றி தொடர்ச்சியாகக் காணப்பட்ட காலத்தில் யானைகளின் நடமாட்டம், வனத்துக்குள்ளேயே இருந்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன்னியாகுமரி தொடங்கி கிருஷ்ணகிரி வரை உள்ள வனப்பகுதிகள், இடைவெளி இல்லாத பரந்து விரிந்து இருந்த காலங்களில் யானைகளால் விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தொந்தரவுகள் இருந்ததே இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட விவசாய நிலங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வேறு கிராம மேம்பாட்டு பணிகள் நடந்த பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி பாதிப்படைந்துள்ளது. தமிழ்நாட்டின் வனப்பகுதியில் காணப்படும் யானைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
யானைகளின் வழித்தடங்களை இணைப்பதன் மூலம் மனிதன்-யானை முரண்பாடுகளை பெரிதும் குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஐகோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் யானைகள் வழித்தடங்கள் அடையாளம் காண்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
யானைகளின் வழித்தடங்களை அறிய முனைவர் ராமன் சுகுமார் தலைமையில் சிறப்பு குழுவின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
யானை நடமாட்டம் உள்ள மாவட்டம் வாரியாக அந்தந்த பகுதிக்கான யானை வழித்தடங்கள் குறித்த விவரங்களை, மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விளக்கி மக்களின் கருத்துக்கள் தொகுக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை சிறப்பு குழுவால் முடிவு செய்யப்படும்" என்று அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். அதில் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-
அசன் மவுலானா:- யானை வழித்தடங்கள் பற்றி அமைச்சர் பேசுகிறார். யானை வழித்தடங்களை அழித்து கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. சாலையை யானைகள் கடக்கும் பகுதிகளில், யானை கடக்கும் பகுதி என்ற பலகைகளை வைப்பதில்லை. கோவையில் ஈஷா யோகா மையத்தை யானை வழித்தடங்களை மறித்து கட்டியுள்ளனர்.
அமைச்சர் மதிவேந்தன்:- யானை வழித்தடங்களைப் பற்றிய முழு அறிவு இன்னும் யாருக்கும் இல்லை. இன்னும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இதை தெளிவுபடுத்தும் வகையில் அதுபற்றி நான் பேசுகிறேன். யானை வழித்தடங்கள் எந்த நிலையில் உள்ளன? என்பதை அறிய வேண்டும். அடுத்தகட்டமாக அதுபற்றிய மக்களின் குறைகேட்டு, அதன் பின்னர்தான் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
குழு அமைக்கப்பட்டு மிகத் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, மக்கள் குறைகேட்டு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். எனவே அவசரப்பட்டு எதையும் நான் கூறவில்லை.
அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன்:- யானை வழித்தடங்கள் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வருகின்றன. வனப் பகுதிகளில் விடுதிகள் அமைத்துக் கொண்டு யானை போக்குவரத்தை தடுக்கின்றனர் என்பது பற்றி அசன் மவுலானா கேட்கிறார்.
உங்கள் அனுமதியைப் பெற்றுத்தான் ஈஷா யோகா அந்த இடங்களை பிடித்தார்களா? யானை வழித்தடங்களை தடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையா? காப்புக்காட்டில் கை வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதற்குத்தான் அவர் பதில் கேட்கிறார்.
அமைச்சர் மதிவேந்தன்:- யானை வழித்தடங்கள் பற்றி பொதுவாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஈஷா பற்றிய முழு விவரங்களை தெரிந்த பிறகுதான் நான் பதில் சொல்ல முடியும். தெரியாமல் அரைகுறையாக நான் எதையும் சொல்லக்கூடாது. அதுபற்றி ஆய்வு செய்த பிறகுதான் விதி முறைகளை மீறியிருக்கிறார்களா? தேவையான அனுமதியை பெற்றுள்ளார்களா? என்பதை பார்த்துவிட்டு விளக்கம் அளிக்கிறேன்" என்று அவர் கூறினார்.