தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 2 Jun 2024 6:42 AM IST (Updated: 2 Jun 2024 6:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை), நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) வரை 2 டிகிரி பாரன்ஹீட் முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் குறைந்து, பல இடங்களில் இயல்பையொட்டியும், சில இடங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் குறையத் தொடங்கும் என்றே கூறப்படுகிறது.


Next Story