குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி


குட்கா விவகாரம்: உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 31 July 2024 7:24 AM GMT (Updated: 31 July 2024 7:59 AM GMT)

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டமன்றத்துக்குள் குட்கா பொருட்களை எடுத்துச்சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அப்போதைய உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து, அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் 31-ம் தேதி (அதாவது இன்று ) தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி, இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்ப அனைத்து அதிகாரமும் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் விதிகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். மக்களின் பிரதிநிகள் அடங்கிய சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும். உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் குறித்து சபாநாயகர் விசாரிக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 17 திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் தொடர்பான விளக்கத்தை சபாநாயகரிடம் அளிக்க வேண்டும். உரிமைக்குழு சட்டமன்ற விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Next Story