சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி


சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 15 July 2024 12:54 PM IST (Updated: 15 July 2024 2:37 PM IST)
t-max-icont-min-icon

நடுரோட்டில் ஆட்டை வெட்டி தேர்தல் தோல்வியை கொண்டாடிய விவகாரத்தை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் விதமாக திமுகவினர் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர்.இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன்தாஸ் பொதுநல மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமில்லாது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். எனவே அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு, இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது என காட்டமாக தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.


Next Story