மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 1 Aug 2024 8:24 PM IST (Updated: 2 Aug 2024 12:19 PM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த மீனவரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;

"கடந்த 31-7-2024 அன்று, IND-TN-10-MM-73 என்ற பதிவுவெண் கொண்ட இந்திய மீன்பிடிப் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதிய துயர சம்பவம் ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. இத்துயர சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். ஒரு மீனவரை காணவில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. இச்சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறும், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவு மந்திரியை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இரண்டு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை அதிகாரிகளின் வசம் இந்த இரண்டு மீனவர்களும் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கிடவும், போதிய மருத்துவ வசதிகளையும் வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அவர்களை மிக விரைவில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும், இதனை கடந்த காலங்களில் பலமுறை ஒன்றிய வெளியுறவு மந்திரி கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். எனவே, இந்த விஷயத்திற்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story