'கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது' - தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்று அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் அமீர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'எந்த விதமான தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.
அதே போல பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியதே. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும் அரசும் கவனமாக இருக்க வேண்டும்
எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி பற்றி பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.