பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பான நடவடிக்கைகள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு


பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பான நடவடிக்கைகள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
x
தினத்தந்தி 28 Jun 2024 1:31 PM GMT (Updated: 28 Jun 2024 1:58 PM GMT)

பெண்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமிழக அரசை பாராட்டுவதாக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும் எனவும், கல்வி மற்றும் பணி நிமித்தமாக நள்ளிரவில் பயணம் செய்யக்கூடிய பெண்கள் தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், பெண்கள் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெண்களின் பாதுகாப்புக்காக பணம் செலவழித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசை பாராட்டுகிறோம் என்று தெரிவித்தனர்.

அதே சமயம் இந்த திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்யப்படுள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இது குறித்து உரிய முறையில் விளம்பரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஏதேனும் குறைகள் இருந்தால் அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Next Story