வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு


வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 9 Sep 2024 10:29 PM GMT (Updated: 10 Sep 2024 1:09 AM GMT)

இயக்குனர் ரஞ்சித் மீது கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் சமீபத்தில், நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகைகள் தங்களது பட வாய்ப்புக்காக நடந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருவது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர், கடந்த 2009-ம் ஆண்டு பாளோலி மாணிக்கம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க கொச்சி வந்திருந்தார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், திரைப்பட அகாடமி முன்னாள் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் குற்றம்சாட்டினார். அவர் கொடுத்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீசார் இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நடிகைகள் மீதான பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பாலூட்டியிட நாமத்தில் என்ற மலையாள திரைப்படத்திற்காக கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் பெங்களூருவுக்கு வாலிபர் ஒருவரை அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து வாலிபரை கட்டாயப்படுத்தி ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று மது அருந்த செய்தார். அந்த நபர் மயங்கிய பின்னர், இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக இயக்குனர் ரஞ்சித் மீது அந்த வாலிபர் தற்போது குற்றம்சாட்டினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நடக்காவு போலீசார் ரஞ்சித் மீது கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் முன் ஜாமீன் கேட்டு இயக்குனர் ரஞ்சித் கோழிக்கோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இந்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு 30 நாட்கள் முன் ஜாமீன் வழங்கியது. அதோடு அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக, நடிகையிம் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story