மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்


மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 20 Aug 2024 5:44 AM GMT (Updated: 20 Aug 2024 5:59 AM GMT)

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதியை நிலைநாட்டவும். இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.

மத்திய அரசின் உயர்பதவிகளில் (லேட்டரல் என்ட்ரி) நேரடி நியமனம் என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல், பழங்குடி இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.

தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற 'கிரீமி லேயர்' முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story