'கருடன்' படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு - டிக்கெட் வாங்கி வழங்கிய வட்டாட்சியர்


கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு - டிக்கெட் வாங்கி வழங்கிய வட்டாட்சியர்
x
தினத்தந்தி 1 Jun 2024 4:08 PM IST (Updated: 1 Jun 2024 4:09 PM IST)
t-max-icont-min-icon

நரிக்குறவர்களை சம்மந்தப்பட்ட திரையரங்கிற்கு அழைத்து சென்ற வட்டாட்சியர், அவர்களுக்கு டிக்கெட் வாங்கி வழங்கினார்.

கடலூர்,

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் 'கருடன்'. இந்த திரைப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கத்திற்கு சென்ற நரிக்குறவகளுக்கு அனுமதிக்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் இன்று படம் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கவும், டிக்கெட் வழங்கவும் நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனையடுத்து இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியருக்காக அலுவலகத்தில் காத்திருந்தன்ர். கோட்டாட்சியர் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் வட்டாட்சியர் பலராமன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் வட்டாட்சியர், நரிக்குறவர்களை சம்மந்தப்பட்ட திரையரங்கிற்கு அழைத்து சென்று டிக்கெட் வாங்கி கொடுத்தார். வட்டாட்சியர் உதவியுடன் டிக்கெட் பெற்ற நரிக்குறவர்கள் படம் பார்ப்பதற்காக திரையரங்கத்தில் உள்ளனர்.


Next Story