தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்


தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்:  அண்ணாமலை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 July 2024 10:28 AM GMT (Updated: 29 July 2024 10:54 AM GMT)

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (ஜூலை 29) முதல் ஜூலை 31 வரை 3 நாட்கள், சென்னை டி.பி.ஐ. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் முற்றுகையிடப்பட்டு, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜேக் அறிவித்தது.

இதன்படி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், ஆசிரியர்கள் கைதுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் இன்று, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆசிரியப் பெருமக்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 309, 311 ஆகியவற்றில், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், ஆண்டுதோறும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம்தான் தொடர்கிறதே தவிர, அவர்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை.

மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story