குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இடைக்கால பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை தீர விசாரிக்கவும். தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இந்த நிலையில், கள்ளாச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.