கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு - ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை ஐகோட்டில் சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்திருந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், "நான் பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில் பணியாற்றியுள்ளேன். பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டதாக என்னை கடந்த 2017-ம் ஆண்டு கலெக்டர் பணியிடை நீக்கம் செய்தார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் பஞ்சாயத்து தலைவரின் ஒப்புதல் அடிப்படையில் நடந்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என் பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது. அனைத்து பணப்பலன்களுடன் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பு அளித்தது. ஆனால், இதுவரை எனக்கு பணி வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பயனும் இல்லை. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை வேண்டும் என்றே அவமதித்துள்ள சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, கலெக்டர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கலெக்டர் உள்ளிட்டோரை ஆஜராக ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜராகி வாதிட்டார். அப்போது கலெக்டர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து சேலம் கலெக்டர் பிருந்தா தேவிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.