போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் இடையே மோதல்
பணி செய்வது சம்பந்தமாக பெண் போலீசார் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 2 பெண் போலீசார் இடையே நேற்று முன்தினம் பணி செய்வது சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒரு பெண் போலீஸ், மற்றொரு பெண் போலீசை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இருவரும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட ஒரு பெண் போலீசை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கும், மற்றொரு பெண் போலீசை திருவோணம் போலீஸ் நிலையத்திற்கும் தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.