சந்திரபாபு நாயுடு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார் - நடிகை ரோஜா பேட்டி
அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளுடன் சந்திரபாபு நாயுடு விளையாடுவதாக முன்னாள் மந்திரி ரோஜா குற்றம்சாட்டினார்.
மதுரை,
ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது.
ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்ஜியமாக்கவே சந்திரபாபு நாயுடு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தி இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கடவுள் என்றால் அவருக்கு பயம் பக்தி இல்லை. அவர் அனைத்து பூஜைகளையும் காலணி அணிந்துக்கொண்டுதான் செய்வார். தனது அரசு மீதான புகார்களை திசைதிருப்பவே லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.