பள்ளிகளில் அனுமதியின்றி முகாம்கள் நடத்தக்கூடாது: தனியார் பள்ளி இயக்குநரகம்


பள்ளிகளில் அனுமதியின்றி முகாம்கள் நடத்தக்கூடாது: தனியார் பள்ளி இயக்குநரகம்
x
தினத்தந்தி 20 Aug 2024 12:28 PM IST (Updated: 20 Aug 2024 4:26 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற செயலில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், போலியாக என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, முகாம்களுக்கு மாநில அமைப்புகள் மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்த ஒரு அமைப்பும் பள்ளிகளில் செயல்படக்கூடாது எனவும், மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமும், பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள் மூலமும் பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களின் பாதுகாப்பின்றி எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக்கூடாது எனவும், முகாம்களில் பங்கேற்பது தொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story