ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: "மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது" - நீதிமன்றம்


ஆம்ஸ்ட்ராங்  உடல் அடக்கம்:  மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது - நீதிமன்றம்
x
தினத்தந்தி 7 July 2024 9:42 AM IST (Updated: 7 July 2024 3:01 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

சென்னை,

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி எனக்கூறி வரை படங்களை அரசு சமர்பித்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், "தே.மு.தி.க. அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2,000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் போது, மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு , வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.

தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார்.

பின்னர் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பாக, மனுதாரர் தரப்பில் விளக்கம் கேட்டு விசாரணையை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பாக, மனுதாரர் தரப்பில் விளக்கம் கேட்டு விசாரணையை காலை 10.30 மணிக்கு நீதிபதி நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் தொடங்கியது அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-

பெரம்பூரில் சுமார் 7,500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது.விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டதுபோல் அனுமதி வழங்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும்.குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும். முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது என்று நீதிபதி கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுரஅடி நிலம் ஒதுக்க தயார். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். திருவள்ளூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம் என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அளிக்கும் மனுவை பரிசீலித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அரசு ஒதுக்கிய இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. ஒதுக்குப்புறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது. அரசுதான் முடிவு செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்க் உடல் அடக்கம் தொடர்பான வழக்கின் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story