கைது நடவடிக்கை: மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்


கைது நடவடிக்கை: மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 2 July 2024 6:58 AM IST (Updated: 2 July 2024 7:00 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 25 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

எனவே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீனவர்கள் மீன பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 5-ந்தேதி பாம்பன் ரோடு பாலத்தில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும், பின்னர் அங்கிருந்து மீனவர்கள் அனைவரும் ஊர்வலமாக மண்டபம் ரெயில் நிலையம் சென்று 4 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்படும் சென்னை ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது என்றும் ராமேசுவரம் தீவு அனைத்து மீனவ சமுதாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 5-ந்தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை சந்திப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story