தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது: சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்திறமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதிமுகவை பொறுத்தவரை ஒரு தேர்தலில் தோல்வி கண்டால் அதற்கடுத்து வரக்கூடிய தேர்தலில் வீறுகொண்டு மிகப்பெரிய வெற்றி பெறும். இது வரலாறு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இக்கட்டான சூழல் ஏற்பட்டபோது இந்த இயக்கத்தை கட்டிக்காத்தது அடிமட்ட தொண்டர்கள்தான்.
2021 தேர்தலில் நமக்கும் திமுகவுக்கும் வெறும் 3 சதவீத வாக்குகள்தான் வித்தியாசம். நம்முடைய மெத்தனம், கவனக்குறைவு காரணமாக திமுக ஆட்சியில் உட்கார்ந்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி, 4 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவருக்கு இருக்கிற நிர்வாகத்திறமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகதான் ஆட்சி அமைக்கும். இதற்கு நாம் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாராலும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.