மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை


மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Aug 2024 7:16 AM GMT (Updated: 27 Aug 2024 7:50 AM GMT)

மேல்படிப்புக்காக அண்ணாமலை நாளை இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்

சென்னை

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனது தலைமையில் தனி அணியை உருவாக்கியதுடன், பா.ம.க., த.மா.கா ஆகிய கட்சிகளையும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களையும் ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியை அடைந்தது. ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவதை குறிக்கோளாக வைத்து அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அண்ணாமலை நாளை (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்.3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பா.ஜ.க. தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.

பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர். மூத்த நிர்வாகிகளை அரவணைத்து, மிகக் குறுகிய காலத்தில்,தமிழகத்தில் பா.ஜ.க. எனும் கட்சியை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர். இவைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் மிக முக்கியமான இடத்தை இந்த இளம்வயதிலேயே ஈர்த்து வைத்திருப்பவர். நேர்மையிலும், உழைப்பிலும், தன்னம்பிக்கையிலும், தேசப்பணியிலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அன்புச் சகோதரர் அண்ணாமலையின் வெளிநாட்டுப் பயணமும், கல்வியும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story