அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அம்மா உணவகங்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
21 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது. இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.
இன்று (19.7.2024) சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார். பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்கிட ஆணையிட்டார். மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.
தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.