விஷ சாராய மரணம்: முதல்-அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் எ.வ.வேலு


விஷ சாராய மரணம்: முதல்-அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் எ.வ.வேலு
x
தினத்தந்தி 20 Jun 2024 4:22 PM IST (Updated: 20 Jun 2024 4:54 PM IST)
t-max-icont-min-icon

விஷ சாராய வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.

அதன்பின்னர் அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. விஷ சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரை காப்பாற்றும் முனைப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. உயிரிழந்தோரின் 27 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விஷ சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவிகள் செய்யப்படும்.

விஷ சாராய விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷ சாராயத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விஷ சாராய வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து மாவட்டங்களில் வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வோம்.

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடிவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை என்று வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனையில் போதுமான அளவுக்கு உயிர்காக்கும் மருந்துகள் உள்ளன. விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story