வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நிலங்களின் பாசன தேவைக்காக கடந்த 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 5 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 7 பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறி பாசன கால்வாய் வழியாக பாய்ந்தோடுகிறது. பாசன கால்வாய் வழியாக அதிகபட்சமாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட முடியும்.
தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் நிரம்பியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது.