கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது


கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 8 Jun 2024 9:47 AM GMT (Updated: 8 Jun 2024 10:03 AM GMT)

காயமடைந்த சிறுத்தையை தெப்பகாடு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவர்சோலையை அடுத்த பொன்வயல் கிராமத்தில், கடந்த 4ம் தேதி சுனில் என்பவர் வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பொன்வயல், பாலம்வயல் உட்பட்ட பகுதிகளில், வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடைய அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள தேயிலை, காபி தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானது. சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக அது பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கும் முன்பாக, அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கூண்டில் சிக்காதபட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை தேவன் எஸ்டேட்- 2 தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தை சிக்கிய இடத்திற்கு சென்ற முதுமலை புலிகள் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர், காயமடைந்த சிறுத்தையை தெப்பகாடு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அங்கு சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அதை வனப்பகுதியில் விடுவதா அல்லது தொடர்ந்து சிகிச்சை அளிப்பதா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை கூண்டில் சிக்கியதை அடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


Next Story