திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் மயங்கி விழுந்து இறந்தார்.
திருவண்ணாமலை,
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். நேற்று காலை 6 மணியளவில் கிரிவலம் வந்த 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் கிரிவலப்பாதை முடியும் இடமான வேலூர் ரோடு தமிழ்நாடு ஓட்டல் அருகில் சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்தார். தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்து அந்த நபரை சோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிரிவலப்பாதையில் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த நபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் சேலம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் சட்டை பையில் பஸ் பயணச்சீட்டை தவிர வேறு எந்த அடையாள அட்டையும், செல்போனும் இல்லாததால் அவர் யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.