பத்துவித பாவங்களையும் போக்கும் பாபஹர தசமி
பேச்சால் ஏற்படும் நான்கு பாவங்கள், கடுஞ்சொல், பொய், அவதூறு, அறிவற்ற பேச்சு ஆகியவையாகும்.
வரும் (16-6-2024) ஆனி 2-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பாபஹர தசமி நன்னாளாகும்
வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமி திதியை சாஸ்திரங்கள் தசஹர (பத்து வித) தசமி என்றும், பாப ஹர தசமி என்றும் குறிப்பிடுகின்றன. வைகாசி வளர்பிறை தசமி திதியில் கங்காதேவி, தேவலோகத்திலிருந்து பகீரதன் முயற்சியால் பூலோகத்திற்கு இறங்கி வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்காதேவியை மனதார நினைத்து நீர்நிலைகளில் நீராடி நம்முடைய பத்துவித (தசஹர) பாவங்களையும் அகற்றிக் கொள்ளலாம் என்பது சாஸ்திர நியதியாகும். வைகாசி அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து தசமி திதி வரை கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, அஸ்வமேத யாகம் செய்த பலன் ஏற்படும் என்று ஸ்கந்த புராணம் தெரிவித்துள்ளது.
அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், கோயிலுக்குள் உள்ள புனித நீர்நிலைகளிலும் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும் என்பது சாஸ்திர சம்மதம். தச ஹர பாவங்கள் என்பது பேச்சால் ஏற்படுவது நான்கு. உடலால் வருவது மூன்று. மனதால் செய்வது மூன்று. ஆக, பத்து பாவங்களையும் போக்கிக் கொள்ள பாபஹர தசமி உதவுகிறது.
பேச்சால் ஏற்படும் நான்கு பாவங்கள், கடுஞ்சொல், பொய், அவதூறு, அறிவற்ற பேச்சு ஆகியவையாகும்.உடலால் ஏற்படும் மூன்று பாவங்கள், திருடுவது, பிறரை துன்புறுத்தல், பிறர் மனைவி மீது ஆசைப்படுவது ஆகியவையாகும். மனதால் ஏற்படும் மூன்று பாவங்கள், மற்றவர் பொருளை அடைய திட்டமிடுவது, கெட்ட எண்ணங்கள், பேராசை ஆகியனவாகும்.
மேற்சொன்ன பத்து பாவங்களும் புண்ணிய காலமான வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது சாஸ்திர விதியாகும்.அந்த நாளில் ராமேஸ்வரம் சேதுக்கரை சென்று நீராட முடியாதவர்கள், அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ நீராடலாம். நதியில் நீர் இல்லாவிட்டால், குலதெய்வத்தை அல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் பிரார்த்தித்துக்கொண்டு இனிமேல் பாவங்கள் செய்வதில்லை என உறுதி செய்து கொண்டு வடக்கு நோக்கி வீட்டிலேயே நீராடினாலும் பாவங்கல் அகலும் என்பதும் சாஸ்திர சம்மதமாகும்.
கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்