இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது


இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது
x

கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் இரும்பு கம்பிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய கம்பியை வாங்கிய வியாபாரியும் சிக்கினார்.

திருபுவனை

திருபுவனையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக இரும்பு பொருட்கள் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். திருட்டு தொடர்பாக கம்பெனியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை நிர்வாகத்தில் ஆய்வு செய்தபோது, திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 22) இரும்பு பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை திருபுவனை மின் அலுவலகம் அருகில் பதுங்கி இருந்த மாதவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, தனியார் கம்பெனியில் திருடிய இரும்பு கம்பிகள், கார் உதிரி பாகத்திற்கு தேவையான உலோக பொருட்களை திருபுவனை ஸ்பின்கோ எதிரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்று விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை செய்தபோது, மாதவன் திருடி விற்பனை செய்த பொருள்கள் இருந்தன. திருட்டு பொருளை வாங்கியதாக வியாபாரி புருஷோத்தனையும் (42) போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த திருட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story