இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபர் கைது
முந்திரிகாட்டிற்கு தனியாக அழைத்துச்சென்று இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம்
முந்திரிகாட்டிற்கு தனியாக அழைத்துச்சென்று இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
'ராங்கால்' மூலம் பழக்கம்
புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். திருமணமானவர். அவருக்கு 'ராங்கால்' மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர், தனது பெயர் ஸ்ரீதர் என்றும், வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருவரும் தனியாக சந்திக்க திட்டமிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரிகாட்டிற்கு சென்றனர். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அப்பெண் திடீரென்று மயங்கி விட்டார். உடனே ஸ்ரீதர், அப்பெண் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் அவர் ஓட்டி வந்த மொபட் ஆகியவற்றை அபேஸ் செய்துவிட்டு தப்பினார்.
வாலிபர் கைது
சிறிது நேரத்துக்கு பின் மயக்கம் தெளிந்து கண் விழித்த அப்பெண், ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து இளம்பெண், கோட்டக்குப்பம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, மொபட்டுடன் தப்பிய நபரை வலைவீசி தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் புதுவை மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்பதும், இளம்பெண்ணிடம் தனது பெயர் மற்றும் முகவரியை தவறாக கூறியதும் தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் முருகனும் (20) கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 3 பவுன் நகை மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.