கழுத்தை நெரித்து மனைவி கொலை


கழுத்தை நெரித்து மனைவி கொலை
x

வில்லியனூர் அருகே மது குடிக்க பணம்தர மறுத்ததால், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மது குடிக்க பணம்தர மறுத்ததால், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு

வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). அவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று மது குடிக்க பணம் இல்லாததால் ராஜேந்திரன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையே மகன் ராஜசேகர் மாட்டை ஓட்டிக்கொண்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன், கலையரசி மட்டும் தனியாக இருந்தனர். அப்போது மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் 2 மணி நேரம் கழித்து மகன் ராஜசேகர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தாயார் கலையரசி வீட்டின் எதிரே உள்ள ரோட்டின் ஓரமாக பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.

தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

கழுத்தை நெரித்து கொலை

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ராஜேந்திரன் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மது குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில், கலையரசியை அவர் அணிந்திருந்த சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் பிணத்தை வீட்டின் எதிரே உள்ள ரோட்டின் ஓரத்தில் சேலையால் போர்த்தி வைத்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.


Next Story