அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?


அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
x

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில் புதுவையில் அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைபாடு என்ன? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

புதுச்சேரி

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில் புதுவையில் அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைபாடு என்ன? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க. விலகல்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். புதுவையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

பா.ஜ.க.வால் தோற்றோம்

ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தபோது புதுவையில் பா.ஜ.க.வால்தான் தோற்றோம் என்று அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கூறியிருந்தார். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரசுடன் தங்கள் கூட்டணி தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் துணை செயலாளரான வையாபுரி மணிகண்டன் என்.ஆர்.காங்கிரசுடனும் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் இன்று சுற்றுலா தினவிழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுவையில் அ.தி.மு.க. தொடருகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுதொடர்பாக அவர்களைத்தான் (அ.தி.மு.க.) கேட்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பகைத்துக்கொள்ள...

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. என்.ஆர்.காங்கிரஸ்-10, பா.ஜ.க.-6, நியமன எம்.எல்.ஏக்கள் -3, பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் -3 ஆகியோர் ஆதரவுடன்தான் ஆட்சி நடக்கிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வுக்காக பா.ஜ.க.வை பகைத்துக்கொள்ள என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தலையும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சந்திக்கவும் என்.ஆர்.காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்து வரும் 2½ வருடமும் ஆட்சியை பிரச்சினை இன்றி கொண்டு செல்ல முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால்தான் புதுவையில் அரசியல் நிகழ்வுகள் மாற வாய்ப்புகள் உள்ளது.

ரங்கசாமி வாழ்த்து

இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகணபதி எம்.பி.யை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் பிற்பகலில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக காலையில் கருத்து தெரிவித்த நிலையில் ஒருசில மணி நேரங்களிலேயே பா.ஜ.க. மாநில தலைவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் புதுவையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியறினாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.


Next Story