காமாட்சியம்மன் கோவில் நில விவகாரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு என்ன?
காமாட்சியம்மன் கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் சென்னை ஐகோார்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி
காமாட்சியம்மன் கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் சென்னை ஐகோார்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் விளக்கம் அளித்தார்.
காமாட்சியம்மன் கோவில் நிலம்
புதுச்சேரி பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியன் விசாரித்து, போலி பத்திரத்தை ரத்து செய்து அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து காமராஜ் நகர் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அவர்கள் அளித்த தீர்ப்பு தொடர்பாக இன்று ஜான்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகாரம் உள்ளது
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், யாருக்கு நிலம் சொந்தம் என்று உறுதி செய்ய ஐகோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் அந்த அதிகாரம் இல்லை. ஜான்குமார் குடும்பத்தினர் சொத்து வாங்கி இருப்பதால், அவர்களுக்கு யாருக்கு நிலம் சொந்தம் என்று நிரூபிக்க அதிகாரம் உள்ளது. யாருக்கு நிலம் சொந்தமானது என்பதை சிவில் கோர்ட்டு தான் தீர்மானிக்கும்.
அது வரையிலும் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தின் அமைப்பை மாற்றக்கூடாது. எந்த விதமான வில்லங்கத்திற்கும் உட்படுத்தக்கூடாது. புதுச்சேரி தலைமை கோர்ட்டுக்கு இது தொடர்பாக விசாரித்து அந்த நிலம் யாருக்கு சொந்தம்? யாருக்கு அதன் மீது உரிமை உள்ளது? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.
சரியான தீர்ப்பு
இதன் மூலம் அந்த நிலம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டு உறுதி செய்யவில்லை. இதனை எதிர்த்து கோவில் நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
அது தவறான சொத்தாக இருந்தால் நான் எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் வாங்குவேனா?. நான் எல்லா ஆவணங்களையும் சரி பார்த்து தான் அந்த சொத்தை வாங்கினேன். தற்போது சென்னை ஐகோர்ட்டு சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை முடியும் வரை அந்த இடத்தை நான் எதுவுமே செய்ய மாட்டேன். தீர்ப்பு வந்த பிறகு அது குறித்து முடிவு செய்வேன்.
அவ்வாறு அவர் கூறினார்.