வில்லியனூர் சார்பதிவாளர் அதிரடி கைது
புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் வில்லியனூர் சார் பதிவாளரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவை காமாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கில் வில்லியனூர் சார் பதிவாளரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவில் நிலம் மோசடி
புதுவை பாரதி வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. 64 ஆயிரத்து 35 சதுர அடி (சுமார் 1½ ஏக்கர்) அளவுள்ள ரூ.12½ கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சார்பதிவாளர் கைது
போலீசாரின் விசாரணையில் சென்னையை சேர்ந்த ரத்தினவேல் உள்பட சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து கோவில் நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலியான ஆவணங்களை அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரும், தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமி பதிவு செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சார்பதிவாளர் சிவசாமியை அவரது வீட்டில் வைத்து இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
கோவில் நில மோசடி வழக்கில் சார்பதிவாளரையும் சேர்த்து இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.