வீட்டு மாடியில் இருந்து குதித்து பல்கலைக்கழக ஊழியர் சாவு
மது குடிப்பதை மனைவி, மகன் கண்டித்ததால் பல்கலைக்கழக ஊழியர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு
மது குடிப்பதை மனைவி, மகன் கண்டித்ததால் பல்கலைக்கழக ஊழியர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்கலைக்கழக ஊழியர்
காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 48). இவர் காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்து கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அய்யனாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இரவு வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் மகன், 'ஏன் இப்படி மது குடிக்கிறீர்கள்?. திருமண வயதில் நானும், தங்கையும் உள்ளோம். இப்படி குடித்து கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி? என்று ஆதங்கமாக பேசியதாக தெரிகிறது.
மாடியில் இருந்து குதித்து சாவு
அப்போது அவர், இனிமேல் மது குடிப்பதை நிறுத்தி விடுகிறேன் என கூறிவிட்டு இரவு முழுவதும் மொட்டை மாடியில் படுத்து உள்ளார். இரவு சாப்பாட்டுக்கு கூட வீட்டிற்கு வரவில்லை. திடீரென இன்று அதிகாலை அய்யனார், வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்