புதுச்சேரி வனத்துறைக்கு தனி இலச்சினை
புதுச்சேரி வனத்துறைக்கு தனி இலச்சினையை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி வனத்துறைக்கு தனி இலச்சினையை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
வனத்துறை இலச்சினை
புதுவை வனம் மற்றும் வனவிலங்கு துறையும், பல்லுயிர் பேரவையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தினத்தை அக்கார்டு ஓட்டலில் நேற்று கொண்டாடின. விழாவுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 14 கிராம பஞ்சாயத்து செயலாக்க குழுக்களுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதமும், நகராட்சி செயலாக்க குழுவுக்கு ரூ.1 லட்சமும் வழங்கினார். மேலும் வனத்துறையின் இலச்சினையையும் (லோகோ) வெளியிட்டார். (இந்த லோகோவில் ஆயிமண்டபம், புதுவை அரசின் பறவையான குயில், நாகலிங்க பூ ஆகியன இடம்பெற்றுள்ளன).
எண்ணெய் திமிங்கலம்
காரைக்கால் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 15 டன் எடையுள்ள எண்ணெய் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் சென்று விடுவித்த 13 மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 7 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம் பேசும்போது, கிராம பஞ்சாயத்து செயலாக்க குழுவினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசும்போது, தொடர்ந்து ஆண்டுதோறும் சர்வதேச பல்லுயிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிபுணர்கள் விளக்கம்
முன்னதாக பல்லுயிர் பெருக்கம் குறித்த கருத்தரங்கு நடந்தது. அதில் செயலாக்க குழுவினரின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக மேடை மற்றும் நுழைவு வாயில் பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்கள் தத்ரூவமாக உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.