சட்டசபை நோக்கி வியாபாரிகள் ஊர்வலம்


சட்டசபை நோக்கி வியாபாரிகள் ஊர்வலம்
x

புதுவையில் வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி சட்டசபை நோக்கி வியாபாரிகள் ஊர்வலமாக சென்றனர்.

புதுச்சேரி

வாடகை உயர்வை ரத்து செய்யக்கோரி சட்டசபை நோக்கி வியாபாரிகள் ஊர்வலமாக சென்றனர்.

சட்டசபை நோக்கி ஊர்வலம்

புதுவை நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் வாழ்வாதரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி அனைத்து மார்க்கெட் வியாபாரிகள் சட்டசபை நோக்கி ஊர்வலம் இன்று நடந்தது. ஊர்வலத்திற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன், சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், நிர்வாகிகள் அபிஷேகம், துரைசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் முத்தியால்பேட்டை, சாரம், சின்னகடை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, செஞ்சி சாலை, காந்தி நகர், லாஸ்பேட்டை ஆகிய மார்க்கெட் சங்க வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சரிடம் மனு

ஊர்வலம் புதுவை நேரு வீதி பழைய சிறை சாலையில் இருந்து புறப்பட்டு மிஷன் வீதி வழியாக மாதா கோவிலை வந்தடைந்தது. அங்கு பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து ஊர்வலத்தை நிறுத்தினர்.

தொடர்ந்து புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை, மார்க்கெட் வியாபாரிகள் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் சாலையில் நிறுத்தி வைத்து வேனில் வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 சதவீதம் வாடகை உயர்வு இருந்து வந்ததை ஆண்டுக்கு ஒருமுறை 10 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்துவிட்டு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் விடுக்கப்பட்டன. மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story