புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதே போல் இன்று புதுவையில் சற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
புதுவை பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பாண்டி மெரினா பீச்சில் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாடினர். இதே போல் குதிரை, ஒட்டகங்களில் ஏறி சவாரி செய்து மகிழ்ந்தனர். பாரதிபூங்கா, தாவரவியல் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி சிறுவர்கள் விளையாடினர்.
புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான ஒய்ட் டவுன் பகுதி, அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.