ரேஷன்கடைகளே இல்லாத மாநிலமாக மாறும் புதுச்சேரி
புதுச்சேரி
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவை பட்ஜெட்டில் 'சமூகநீதி' என்ற வார்த்தையை பயன்படுத்தி திராவிட மாடல் ஆட்சி சித்தாந்தத்தை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் எந்த தொழிற்சாலை புதிதாக வந்தது? புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு எப்போது மின்சாரம், இடம் கொடுப்பீர்கள்?
வேளாண் அறிவியல் நிலையம் புதர்மண்டி கிடக்கிறது. ரேஷன்கடைகள் மூலம் வெள்ளை அரிசி வழங்க என்ன தடை?. அதற்கான பணமாவது போட்டீர்களா?. ரேஷன்கடையே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறிவிட்டது. நமது முதல்-அமைச்சர் அரசு மருத்துவக்கல்லூரியை தவிர வேறு எந்த நிறுவனத்தையும் புதியதாக ஆரம்பிக்கவில்லை. டி.ராமச்சந்திரன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார்.
கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.300 அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த துறையின் மூலம் வழங்கப்படும்? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? திருக்காஞ்சி புஷ்கரணி விழாவுக்கு பிரதமர் வருகிறார் என்கிறார்கள். ஆனால் அங்கு வேலை நடக்கவில்லை. நமது முதல்-அமைச்சருக்கு நல்ல எண்ணம் உள்ளது. ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை.