பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரம்
முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரியாங்குப்பம்
முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற பணிகள் தற்போது சூடுபிடித்துள்ளன.
பொங்கல் பண்டிகையின்போது மண்பானையில் பொங்கலிடுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். நாகரிகம் மாற்றம் காரணமாக நகர்புறங்களில் கியாஸ் அடுப்பில் உலோக பாத்திரங்களில் தற்போது பலர் பொங்கல் விடுகின்றனர். இருப்பினும் பண்டைய வழக்கப்படி மண்பானையில் பொங்கல் விடுவதை இன்றும் பலர் பின்பற்றி வருகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகை வந்தாலே மண் பானைக்கு மவுசுதான்.
கைவினை கிராமம்
புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் மண்ணால் செய்யப்படும் அகல், சிற்பம் பிரசித்தி பெற்றதாகும். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கைவினை கிராமத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் விற்பனை செய்ய வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
விலைக்கு வாங்கப்படும் களிமண்
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மண்பானை செய்யும் தொழில் சூடுபிடித்துள்ளது. மண்ணை பசை போன்று பதப்படுத்தி, அதை சுழலும் சக்கரத்தின் மூலம் பானையாக உருவாக்கி, அதன் பிறகு கீழ்பகுதியை கைகளால் இணைத்து பானைக்கு முழு உருவம் கொடுக்கப்படுகிறது. அந்த பானை நன்றாக காய்ந்த பிறகு அதற்கு வண்ணம் பூசி விற்பனை செய்யப்படுகிறது.
நாங்கள் தயாரிக்கும் மண்பானைகள் அதன் அளவுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் இதற்கான மண் கிடைக்கிறது. அங்கிருந்து ஒரு மாட்டு வண்டி மண் ரூ.2,500-க்கு வாங்கி பானைகள் செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் மண்பானை சென்னை, கோவை, சேலம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய ஊருக்கு வியாபாரிகள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாட்டு ஆர்டர்
கடந்த வாரம் வெளிநாட்டிற்கு 2,500 மண்பானை ஆர்டர் வந்தது. ஆனால் மழை காரணமாக மண்பானை செய்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த ஆர்டர் எங்கள் கைவிட்டு போனது.
ஆண்டாண்டு காலமாக நாங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் கூட பொருளாதார ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியவில்லை. மண்பாண்ட தயாரிப்புக்கு தேவையான களிமண், சூளைக்கு பயன்படுத்தும் தென்னை, கோம்பை மட்டைகள் ஒரு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. ஆனால் தற்போது அவை பணம் கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட பொங்கல் பண்டிகைக்காக அரசு வழங்கும் இலவச தொகுப்புடன் மண்பானையும் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.