அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
x

நெடுங்காடு அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெடுங்காடு

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரத்தம் குறைபாடு

காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கனிமொழி (வயது31). கனிமொழிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாததால் நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அப்போது பரிசோதித்த டாக்டர்கள், பெண்ணுக்கு ரத்தம் குறைவாக உள்ளதால் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும், மேலும் ரத்தம் அதிகரிக்க தினந்தோறும் சிறப்பு மருந்துடன் டிரிப்ஸ் செலுத்த வேண்டும். அந்த வகையான சிறப்பு மருந்து, சுகாதார நிலையத்தில் இருப்பு இல்லை. வெளியில் வாங்கி வந்து தந்தால் சிகிச்சை அளிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.

தவறான மருந்து

தொடர்ந்து, வேல்முருகன் டாக்டரின் சீட்டை தனியார் மருந்துக்கடையில் காட்டி மருந்தை வாங்கிவந்து கொடுத்துள்ளார். அதன்படி, கடந்த 2 நாட்கள் குறிப்பிட்ட சிறப்பு மருந்தை முறைப்படி டாக்டர்கள் ஏற்றிவந்ததாக கூறப்படுகிறது. நேற்று கனிமொழியை காணசென்ற வேல்முருகன், மனைவிக்கு ஏற்றும் சிறப்பு மருந்தை பார்த்து, இது நான் வாங்கி கொடுத்த மருந்து இல்லாமல் வேறு மருந்து ஏற்றியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பணியில் இருந்த நர்சிடம் இது குறித்து கேட்டபோது, சுதாரித்துகொண்ட நர்சு, சிறப்பு மருந்து முடிந்து விட்டது. அதனால் எங்களிடம் இருந்த மருந்தை செலுத்தியதாக கூறி, ஏற்றிய மருந்தை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, கனிமொழிக்கு உடலில் அதிக சோர்வு ஏற்பட்டு மயக்க நிலை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுகாதார நிலையம் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த கனிமொழியின் கணவர் மற்றும் உறவினர்கள் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பணிக்கு வந்த டாக்டர்கள், தொடர் சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும் என கூறியதாக தெரிகிறது. அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமாரையும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின், மருந்தை மாற்றி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில், சிறப்பு சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதனை ஏற்காத கணவர் மற்றும் உறவினர்கள் கனிமொழியை, காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். தற்போது கனிமொழி நலமுடன் இருப்பதாக தெரியவருகிறது. உறவினர்களின் முற்றுகையால், நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story