ரங்கசாமி பதவி விலகினால் தான் மக்களுக்கு பாதுகாப்பு
ரங்கசாமி பதவி விலகினால் தான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி
ரங்கசாமி பதவி விலகினால் தான் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரை வேக்காடு
தமிழகம் வந்த பிரதமர் மோடி புதிய ரெயில்வே திட்டங்கள், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். குறிப்பாக கச்சத்தீவை மீட்பது, நீட் தேர்வு ரத்து, கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால் இதையெல்லாம் பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகின்றனர். ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அந்த மாநில முதல்-அமைச்சர் மக்களின் நலன் கருதி கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம். அதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் என்பவர் சர்வாதிகாரி போலவும் அவரிடம் யாரும் எந்த கோரிக்கையும் வைக்கக்கூடாது என்பதுபோலவும் பேசி வருவது அவர்களது அரைவேக்காட்டு தனத்தை காட்டுகிறது.
ரங்கசாமி பலவீனம்
மக்களின் உரிமைகளை கேட்க முதல்-அமைச்சருக்கு உரிமை உண்டு. அதை ஒரு சிலர் தவறாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்து ஜால்ரா போடுகிறார்கள். நான் தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும்.
புதுவையில் மின்சார வினியோகத்தை தனியாருக்கு கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மயத்தை எதிர்ப்பதில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் தெளிவாக உள்ளோம். மத்திய அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்து வருகிறார். அவர் ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி உள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமி பலவீனமாக உள்ளார். அவரை பா.ஜ.க. ஆட்டுவிப்பது தெளிவாக தெரிகிறது.
கொலைநகரம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.60 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 64 திட்டங்களுக்கு கோப்புகளை அனுப்பினோம். ஆனால் அப்போதிருந்த கவர்னரும், தலைமை செயலாளரும் காலதாமதம் செய்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஊழல் ஆட்சி செய்தவர் என்று கூறிய கிரண்பெடிக்கு ரங்கசாமி ஆதரவளித்தார். ஆனால் இப்போது கவர்னர், அதிகாரிகள் முதல்-அமைச்சருக்கு சாதகமாக உள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு பஞ்சாலைகளை திறப்போம் என்று கூறினார்கள். லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலையும் அமைச்சரின் தொகுதியில்தான் உள்ளது. ஆனால் அந்த ஆலையை திறக்காதது ஏன்? புதுவையில் அவலமான ஆட்சி நடக்கிறது. இப்போது கொலை, கொள்ளை, கஞ்சா, கடத்தல், வீடுநில அபகரிப்பு ஆகியன அதிகரித்துள்ளது. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகும் காலங்களில் எல்லாம் புதுச்சேரி கொலை நகரமாகும். அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டது.
கஞ்சா விற்பனை தாராளம்
கஞ்சா விற்பனை தாரளமாக நடக்கிறது. புதுவையின் கலாசாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியில் இருந்து போனால்தான் புதுவை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அவரால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதி பெற தெம்பு இல்லை. சிறையில் இருந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல் தொடங்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.