பெண் தொழிலாளர்களிடம் வினாடி- வினா நடத்திய அமைச்சர்
புதுவையில் 100 நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி பிறந்தநாள் எப்போது? என கேட்டு அமைச்சர் சாய்.சரவணன்குமார் வினாடி-வினா நடத்தினார்.
அரியாங்குப்பம்
100 நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி பிறந்தநாள் எப்போது? என கேட்டு அமைச்சர் சாய்.சரவணன்குமார் வினாடி-வினா நடத்தினார்.
தூர்வாரும் பணி
புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் இன்று தொடங்கியது. தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள்- நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சாய்.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதியில் உள்ள செடி கொடிகளை ரூ.30.62 லட்சம் செலவில் அகற்றுதல் மற்றும் சுத்தப்படுத்தும் பணி, காக்காயந்தோப்பு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட வம்பா வாய்க்காலை ரூ.3 லட்சம் செலவில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
பிரதமர் பிறந்த ஆண்டு?
அப்போது பெண் தொழிலாளர்கள், ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம் வழங்குவதை நிறுத்திவிட்டு, மீண்டும் அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து 100 நாள் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களிடம் அமைச்சர் சாய். சரவணன்குமார் வினாடி-வினா நடத்தினார்.
அப்போது அவர், "நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூறும் நபர்களுக்கு ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும். பதிலை தவறாக கூறியவர்கள் எனக்கு ரூ.2 ஆயிரம் தர வேண்டும்" என்றார். எல்லோரும் ரெடியா?. கேள்வியை கேட்கட்டுமா? என்றார். அதைத்தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் பிறந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு என்ன? என கேள்வி எழுப்பினார்.
பெண்களின் சிரிப்பலை
இந்த கேள்விக்கு அங்கிருந்த பெண்கள் மத்தியில் எவ்வித பதிலும் இல்லை. திடீரென்று இப்படி கேட்டால் எப்படி சொல்வது? இதென்ன பள்ளிக்கூடமா? என்று சிணுங்கி கொண்டனர்.
சில நிமிடம் அவகாசம் கொடுத்தும் பெண்கள் பதில் தெரியாமல் முழிக்கவே, சரி உங்களுக்கு பதில் தெரியாததால் ரூ.1,000-த்தை நானே வைத்துக்கொள்கிறேன் என்றார்.
சற்றும் எதிர்பாராத அமைச்சர் நடத்திய வினாடி-வினா நிகழ்ச்சியால் பெண் தொழிலாளர்கள் நெகிழ்ந்து போனாலும், அமைச்சரின் பேச்சால் அவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. வயதான பாட்டிகள் சிலர் அமைச்சருக்கு விபூதி, குங்குமம் வைத்து வாழ்த்தினர். அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.