பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டியவர் கைது
திருவண்டார்கோவில் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஸ்ரீராமலு (வயது 36). திருபுவனை அருகே திருவண்டார்கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்த பங்கில் சரவணன் (37) என்பவர் ஊழியராக உள்ளார். நேற்று மாலை சரவணன் பணியில் இருந்தபோது, திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியை சேர்ந்த ராஜா(25), குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார்.
ரொக்கமாக பணம் இல்லாததால் 'கூகுள்பே' செயலி மூலம் பணம் அனுப்புவதாக ராஜா தெரிவித்தார். அதற்கு பணம் அனுப்பிய பிறகு பெட்ரோல் போடுவதாக சரவணன் கூறினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணன் தலையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். தலையில் காயமடைந்த அவரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு மதடிகப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஸ்ரீராமலு திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜாவை இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.